Translate

வியாழன், அக்டோபர் 04, 2012

எல்லைகாந்தி - கான் அப்துல் கபார்கான் - Khan Abdul Ghaffar Khan (1890-1988)


எல்லைகாந்தி - கான் அப்துல் கபார்கான் - Khan AbdulGhaffar Khan (1890-1988)
- சாரதாமணி ஆசான்
Khan Abdul kaparkamn
பரந்து விரிந்து சிறந்து விளங்கும் உலகில் வாழும் பல்வேறு இனமக்கள் அனைவரின் நலம்நாடி அவர்களுள் தொடர்ந்து நிகழும் இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும், தீமைகளுக்கும், சண்டைகளுக்கும், வன்முறைகளுக்கும் நிரந்தரத் தீர்வும், நேரிய வழிமுறைகளையும் அமைத்தவர்கள் உலகில் மிகச் சிலர் ஆவர். அவர்களில் ஒருவர்தான் அமைதிப்புறாவான எல்லை காந்தி என்று எல்லோரும் விரும்பி அழைக்கப்படுகிற கான் அப்துல் கபார் கான். உலகில் விரவிய குறைகளுக்கும் தொடர்ந்து வரும் தொல்லைகளுக்கும் என்றென்றும் நிலைத்து நின்று நீடித்த தீர்வு தருவதும், உயர்ந்து விளங்குவதும் சரியான பாதையில் மக்களை அழைத்துச் செல்வதும் நிரந்தரமான வெற்றியை அளிக்கக் கூடியதுமான அமைதி வழியை _ அகிம்சை வழியை, அறவழியை உண்மை வழியைக் காட்டிச் சென்றுள்ளார். இந்த உயர்ந்த குறிக்கோள்களை உள்ளடக்கிய இயக்கம் கண்டார். அவ்வியக்கத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் பிறந்த இவர் _ பிரித்தானியரின் (British) காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபடவும் _ சுதந்திர இந்தியாவில் மக்கள் அனைத்து நலன்களையும் பெற்று உயரவும் எல்லைக் காவலராகத் தம்மை இணைத்துக் கொண்டவர்.
பிறப்பும் உயர்வும்: 1890ஆம் ஆண்டில் உட்மன்சாய் (UTMANZAI) என்ற கிராமத்தில் பதான் (PASHTUN) இனத்தில் பெஷாவர் மாநிலத்தில் பிறந்தார். இவர் தமது ஆரம்பக் கல்வியை பெஷாவரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் கற்றார். அதைத் தொடர்ந்து மேல்படிப்பிற்காக அலிகார் நகர் சென்றார். அங்கு பல்வேறு கல்வியாளர்களையும், தேச நலனுக்காக இயங்கும், காந்தியடிகள் -_ பண்டித நேரு _ அபுல் கலாம் ஆசாத் ஆகியோரையும் சந்தித்தார்; இவர்களுடன் கலந்து பழகும் வாய்ப்புக் கிட்டியது. மேற்படிப்புக்காக இலண்டன் செல்லத் திட்டமிட்டார். எனினும் இவரது அன்னையார் விரும்பாததால் அத்திட்டத்தைக் கைவிட்டார்.
இக்கால கட்டத்தில் இவர் வாழ்ந்த பகுதியில் உள்ள மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நிலவி வந்த அறியாமையையும் _ வறுமையையும் உணர்ந்தார். அம்மக்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வன்முறையில் ஈடுபட்டு வந்ததை உணர்ந்தார். இவர்களது வாழ்க்கைத் தரம் உயர வேண்டுமாயின் கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்து அப்பகுதி மக்களுக்காக பல பள்ளிகளைத் துவக்கினார். இம்முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பெரும் வரவேற்பளித்தனர். அதனால் இவரது மதிப்பு பல வகையிலும் உயர்ந்தது. மலைவாழ் மக்களிடை விழிப்புணர்வை ஊட்டவும் _ கல்வியைக் கற்பிக்கவும் தொடர் பயணம் மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள கிராமம் கிராமமாக நாளும் 25 மைல் தூரம் பயணம் செய்து சமுதாய சீர்திருத்தம் பற்றியும் _ கல்வி கற்பதன் அவசர அவசியத் தேவை குறித்தும் பேசினார்.
விடுதலை உணர்வு:தனது தேசம் பிரித்தானிய காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டு பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆட்பட்டு மக்கள் நாளும் அல்லல்படும் அவலத்தைக் கண்டார். ஏற்கெனவே வறுமையாலும், அறியாமையாலும் பல்வேறு சமுதாய சிக்கல்களில் சிக்கிச் சிதறுண்டு கிடக்கின்ற மக்கள் பிரித்தானியரின் காலனி ஆதிக்கத்தால் மேலும் மேலும் இன்னலுற்று கொடுமையில் வாடுவதைக் கண்டார். அடக்குமுறையிலிருந்து விடிவுபெற சமுதாய ஒற்றுமையும் விடுதலை உணர்வும் தேவை என்பதை உணர்ந்தார்.
குடாய் கிட்மட்கார் இயக்கம்: (Khudai Khidmatgar)  1920ஆம் ஆண்டு பிரித்தானிய காலனி ஆட்சியை முடிவு கட்டவும், பிளவுபட்ட மக்களை ஒன்றிணைக்கவும், சீர்திருத்த நோக்கம் கொண்ட சமுதாயத்தை வடிவமைக்கவும், மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்கவும் அமைதி வழியில் நின்று போராட (Non-Violence) குடாய் கிட்மட்கார் இயக்கம் கண்டார்.
அவ்வியக்கத்தின் முதன்மைக் கோட்பாடு அகிம்சை -_ பொறுமை மற்றும்  உண்மை. இவற்றை,  தொடர்ந்து மக்களிடம் கொண்டு சென்றார். வன்முறையைவிட அமைதிவழியில் செல்வதற்கு மிகுந்த துணிச்சலும் ஆற்றலும் தேவை. வன்முறை என்றும் தீமையையும், பழியையும் உருவாக்கும் _ சமாதானமே நன்மையையும் அன்பையும் வளர்க்கும் என்று மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். இவ்வியக்கம் நோக்கி மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதில் இணைந்த மக்கள் 100,000 பேர். அகிம்சை என்ற சத்யாகிரகத்தை முழுமூச்சுடன் ஆதரித்தவர்கள் ஆடவர், மகளிர் மற்றும் இளைஞர்கள். இவர்கள் பல்வேறு இனத்தவர்கள் _ பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் _ இந்துக்கள் _ முகமதியர்கள் _ கிறித்துவர்கள் _ சீக்கியர்கள் _ புத்தமதத்தைத் தழுவியவர்கள்  _ பார்சி இனத்தவர்கள் ஆகியோர் இதில் அடக்கம்.
மக்களிடம் இவர் எடுத்துரைத்த செய்திகள்: தொடர் போராட்டம் தொடரும். உங்களை காவலரோ _இராணுவ அதிகாரிகளோ ஒன்றும் செய்துவிட முடியாது. நான் உங்கள் போராட்டத்திற்கென வழங்கப்போகும் ஆயுதம் அமைதியும் _ பொறுமையும் சத்தியமும் ஆகும். இவ்வாயுதத்தை உலகின் எந்த சக்தியாலும் எதிர்த்து நிற்க இயலாது. அதுவே அகிம்சை என்னும் சத்யாகிரக வழியாகும். தொடர் போராட்டம்: அகிம்சை வழியில் போராடிய இவர் இந்திய தேசியக் காங்கிரஸ் கொள்கைகளைப் பெருமளவு மதித்தார். அதன் காரணமாக காந்தியடிகளுடன் இணைந்து ஒத்துழையாமை இயக்கம் _சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்து இயக்கங்களிலும் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டார். இந்திய மக்கள் அனைவருடனும் தோளோடு தோள் இணைந்து முழுவீச்சுடன் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றார். அதனால் 1920லிருந்து 1947 வரை தொடர்ந்து பலமுறை சிறையில் அடைபட்டார். இவரது இயக்கத் தொண்டர்களில் பலர் பல்வேறு இன்னல்களுக்கும், உயிர் இழப்புகளுக்கும் உள்ளாயினர். 1930ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட குடாய் கிட்மட்கார் இயக்கம் சார்ந்த தொண்டர்களில் 250 பேர் பிரித்தானிய இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இதுதான் சுதந்திரப் போராட்டத்தில் அமைதி வழியில் ஈடுபட்ட தொண்டர்கள் தம் தாய்நாடு காக்கத் தந்த விலைமதிப்பற்ற அர்ப்பணிப்பாகும்.
பிரிவினையும் சுதந்திரமும்:- பிரித்தானிய அரசாங்கம் வடமேற்கு எல்லைப்புற இந்தியாவை (NWFP)  பாகிஸ்தானாகப் பிரிக்க முடிவெடுத்த பொழுது இவர் அப்பிரிவினைக்கு எதிராகக் குரல்கொடுத்தார். ஒன்றுபட்ட, மதச்சார்பற்ற இந்தியா ஒன்றே அனைவர்க்கும் நன்மை பயக்கும் என்று நம்பினார். இவர் காங்கிரசின் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்தபோது, அக்கட்சி பிரிவினைக்கு (பாகிஸ்தான்) ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த போது தங்கள் கொள்கைக்குத் துரோகம் இழைக்கப்பட்டதாக நினைத்தார்; எனினும் காந்தியாரோடு நல்லிணக்கம் கொண்டிருந்தார். பாகிஸ்தான் உருவானபோது அங்கு அமைந்த முகமது அலி ஜின்னாவின் அரசு இவரையும் இவரைச் சார்ந்த இயக்கத்தினரையும் அடக்கி ஒடுக்கியது. எந்த ஒரு காரணமும் இன்றி 1948ஆம் ஆண்டிலிருந்து 1954ஆம் ஆண்டுவரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
அமைதி வழியில் பெற்ற மாண்பு: இவர் தொடர்ந்து பல இன்னல்களையும், சிறைவாசத்தையும் அமைதி வழியிலேயே எதிர்கொண்டார். உலகில் எங்கெல்லாம் அமைதி நிலைபெற வேண்டுமோ அங்கெல்லாம் அகிம்சை நெறி பின்பற்றப்பட வேண்டும். அகிம்சை இல்லா இடத்தில் ஒருபோதும் அமைதி பிறக்க வழியில்லை என்பதில் உறுதியாக நின்றார். இதற்காகத் தன் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் இழக்கத் துணிந்தார். 1983ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்திய குடியுரிமை பெறாத இவருக்கு முதன்முதல் அவ்விருது வழங்கி இந்திய நாடு தன் பெருமையை உயர்த்திக் கொண்டது. 1988ஆம் ஆண்டு வீட்டுக் காவலில் இருந்தபோது பெஷாவரில் இவர் மறைந்தார். அவரது விருப்பத்திற்கிணங்க அவரது நல்லுடல் ஜலாலாபாத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் எழுதிய அவரது வாழ்வும் - போராட்டமும் (My life and struggle) என்ற சுயசரிதை இன்றும் உலகத்திற்கு கலங்கரை விளக்கமாக நின்று வழிகாட்டுகிறது.
                                               Courtesy-Vituthalai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக