Translate

புதன், செப்டம்பர் 19, 2012

மதிப்பெண் வாழ்வை தீர்மானிக்குமா?


   எல்லோரும் படிப்பாளிகள் தான். எந்த துறையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானித்து முடிவு எடுப்பதில் தான் திறமை இருக்கிறது. அறிவியல் படிக்க விரும்புபவர்கள் அக்கவுன்டன்சி படிக்க சென்றால் வெற்றி பெற முடியுமா? வரலாறு படிக்க விரும்புபவர்கள் சி.ஏ., படிக்க முடியுமா? ஆனால் சி.ஏ., படித்தாலும் வரலாறு படித்தாலும் அவரவர் நுட்பத்திற்கேற்ப உழைத்தால் சாதிக்க முடியும். எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை குழந்தைகள் முடிவு செய்ய வேண்டும். பெற்றோர் வழிகாட்ட வேண்டும். 

  ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நம்மை சுற்றியுள்ளவர்கள் நமக்குத் தரும் அறிவுரைகள் அனைத்தும் அந்த குறிப்பிட்ட நேரத்துக்கு சரியெனத் தோன்றலாம். போகிற போக்கில் சொல்லக்கூடிய இந்த அறிவுரைகளை அப்படியே ஏற்றுக் கொள்வது  அறியாத விதையைப் பார்த்து இன்ன மரம்தான் முளைக்கப் போகிறது என்று ஆருடம் கூறுவதுபோல் ஆகிவிடும்.

  ஓஷா கூறியது போல், விதை என்பது என்ன... மரத்தின் ஒரு சுருக்கப்பட்ட வடிவம்தான். நீங்கள் அந்த மரத்தைப் பார்க்க முடியாத அளவுக்கு அந்த மரம் அழுத்தப்பட்டு அதற்குள் அடங்கிக் கிடக்கிறது. ஆனால் வளமான மண், சூழ்நிலை மற்றும் வாய்ப்பளித்தால் அது முளைவிட துவங்கி மரமாக உருமாறும்.

  விதைதான் அந்த மரத்தின் அச்சு. உங்களால் விதையை அறிந்து கொள்ள முடியும் என்றால் மரத்தைப் பற்றி அழகாக எடுத்துக்கூற முடியும் அது கனி தரும் காலத்தைப் பற்றியும் கூற முடியும். ஒவ்வொரு தனிநபரும் வெவ்வேறானவர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமை இருக்கிறது. ஒவ்வொருவரின் திறனை அறிந்து அதற்கேற்றாற் போல் அவருடைய வேலை வாய்ப்பை அறிந்து கொள்வதுதான்  வேலைவாய்ப்பு திட்டமிடல். இது சரியாக நடக்கும் போது, சக்தி பிறக்கிறது. பெரிய முயற்சி இல்லாமலேயே திறமை அதிகரிக்கிறது. ஒரு முறை கன்பூசியஸ் சொன்னார்... உங்கள் வேலையை நீங்கள் மிகவும் ரசித்து செய்தீர்களேயானால்... அது வேலையாகவே இருக்காது... என்றார். இயல்பாகவே இந்த குணம் வெளிப்படும் போது வெற்றி தானாகவே வருகிறது. வேலைக்கான தேவை மற்றும் தனிநபரின் விருப்பம் பூர்த்தியாகிறது.

  ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதையே தங்கள் வாழ்நாள் ஆசையாக கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் உதவ வேண்டும் என்று நினைக்கும் போது, போதுமான தகவல் இல்லாமல் அவர்களே தடுமாறுகிறார்கள்.

  குழந்தையின் திறமையைப் பற்றியும் வேலை வாய்ப்புகளைப் பற்றியும் முழுமையாக அறியாத அவர்கள் இந்த இரண்டையும் சரியாக பொருத்த முடியாமல் தவிக்கிறார்கள்.

  நல்ல வேலையில் அமர்வதற்கு ஏராளமான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளும் அறிய வேண்டும். இதற்கு தேவை மதிப்பெண் மட்டுமல்ல. ஒவ்வொருவரும் தங்களது பொதுவான திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். பள்ளி படிப்பு மதிப்பெண் மட்டும் வேலை பெற்றுத்தராது. குறிப்பிட்ட வேலைக்கான தேர்வு, நேர்காணல் போன்றவற்றிலும் வென்றாக வேண்டும். எனவே மதிப்பெண் மட்டுமே வாழ்வை தீர்மானிக்காது என்று உணர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக