Translate

செவ்வாய், செப்டம்பர் 11, 2012

உழவுப் பணிக்கான மானியத் தொகை இரட்டிப்பு : தமிழக அரசு


சென்னை, செப்., 11 : உழவுப் பணிக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மானியத் தொகையை இரட்டிப்பாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகம் உரிய காலத்தில் திறந்துவிடாத சூழ்நிலையில், சம்பா சாகுபடியை மேற்கொள்ளும் வகையில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் பெய்யத் துவங்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, 17.9.2012 முதல் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், சம்பா சாகுபடிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய உத்திகளை கையாளும் திட்டத்தினை அறிவித்து அதற்கென 53 கோடியே 53 லட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டார்.இந்த உத்தரவினையடுத்து, இந்தத் திட்டத்தினை விரைவாகவும், சிறப்புடனும் செயல்படுத்தும் வகையில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் குறித்து சிறப்பு முகாம்கள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் விவசாயிகளிடையே விரிவான விழிப்புணர்வை வேளாண் துறை அதிகாரிகள் ஏற்படுத்தியதோடு, அவர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் கேட்டறிந்தனர்.இதனையடுத்து, கடந்த 10 நாட்களில் 2,754 ஏக்கரில் சமுதாய நாற்றங்கால் அமைக்க விவசாயிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எதிர்வரும் 10 நாட்களில் கூடுதலாக 7,250 ஏக்கர் பரப்பில் சமுதாய நாற்றங்கால் அமைக்க உள்ளனர். இது மட்டுமல்லாமல், நேரடி விதைப்பு மேற்கொள்ளும் வகையில், 53,225 ஏக்கர் நிலப்பரப்பில் உழவுப் பணிகள் மேற்கொண்டு, 47,000 ஏக்கர் நிலப்பரப்பில் விதைப்புப் பணிகளை விவசாயிகள் முடித்துள்ளனர். மேலும், 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் நடவுமுறை மூலம் சம்பா நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.இந்தத் திட்டம் விவசாயப் பெருமக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளதால், இத்திட்டத்தினை மேலும் ஊக்குவிக்கும் வகையில், விழிப்புணர்வு முகாம்களில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்று, உழவுப் பணிக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட மானியத் தொகையான ஏக்கருக்கு 240 ரூபாய் என்பதை 480 ரூபாயாக உயர்த்தியும்; உழவுப் பணிக்காக ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட 1,00,000 ஏக்கர் பரப்பினை 2,50,000 ஏக்கராக உயர்த்தியும்; நேரடி நெல் விதைப்புக்காக ஒரு ஏக்கருக்கு 30 கிலோ வீதம் சான்று நெல் விதைகள்வழங்கிடவும்; இவ்வாறு வழங்கப்படும் விதைகளுக்கு கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் வீதம் மானியம் வழங்கிடவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நடவடிக்கையினால் அரசுக்கு 17 கோடியே 10 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இதனையும் சேர்த்து சம்பா சாகுபடிக்காக டெல்டா விவசாயிகளுக்கு 70 கோடியே 63 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, விதையிடும் கருவிகளை வாங்குவதற்காக விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக