Translate

ஞாயிறு, ஜூன் 10, 2012

ஆரோக்கியமான குழந்தைகளே படிப்பில் சாதிக்கின்றனர்!

         பள்ளி குழந்தைகளின் கல்வித்திறனை வளர்ப்பதில், அவர்கள் படிக்கும் நேரத்தைவிட, அன்றாட சுகாதார செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கின்றன என, ஆய்வு ஒன்றில் தெரிய வந்ததுள்ளது.
         இந்திய மருத்துவக் கழகம், சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா ஆகிய பெருநகரில், "பள்ளி குழந்தைகளின் கல்வித்திறனில், அவர்களின் அன்றாட சுகாதார செயல்பாடுகளின் பங்கு" எனும் தலைப்பில், ஆய்வு ஒன்றை அண்மையில் நடத்தியது.
        500 பேரிடம் சோதனை: ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின், 500 பெற்றோரிடம், 40 குழந்தை நல மருத்துவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் வெளிவந்துள்ள சுவாரஸ்ய தகவல்கள்:
         * தேர்வுகளில், 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் மற்றும் பள்ளி வருகைப்பதிவு கொண்ட மாணவர்கள் ஒரு குழுவாகவும் (குழு 1); 80 சதவீதத்திற்கு குறைவானவர் மற்றொரு குழுவாகவும்(குழு 2) பிரித்து ஆய்வு செய்ததில், பள்ளி வருகைப்பதிவுக்கும், மதிப்பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
        * தினமும் குளித்தல், உணவு அருந்தும் முன் கை கழுவும் பழக்கம், உறங்கும் கால அளவு, வெளிப்புற விளையாட்டு ஆகிய காரணிகள், இவ்விரு குழுக்களைச் சேர்ந்த குழந்தைகளின் உடல் சுகாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது, மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் எதிரொலிப்பதும் தெரிய வந்துள்ளது.
தொற்று நோய் பாதிப்பு:
       * அதாவது, தினமும் குளிப்பது, அவ்வபோது கை கழுவுவது போன்ற அடிப்படை சுகாதாரத்தை, குழு 1ல், 68 சதவீதம் பேர் மற்றும் குழு 2ல், 19 சதவீதம் பேர் பின்பற்றுவது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, இரண்டாவது குழுவைச் சேர்ந்த மாணவர்கள், உடல்நல பாதிப்பால், குறிப்பாக குடல் சார்ந்த தொற்றால் பாதிக்கப்பட்டு, பள்ளிக்கு அதிகம் விடுப்பு எடுத்துள்ளனர்.
     * குழு 2ல், 43 சதவீதம் பேர் மட்டும், ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் படிப்பது, 39 சதவீதம் பேர், ஒரு நாளைக்கு 7 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குவதும் கண்டுபிடிக்கப்பட்டது. மாறாக, குழு 1ல், 63 சதவீதம் பேர், ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் படிப்பது, 15 சதவீதம் பேர் மட்டும், ஒரு நாளைக்கு 7 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குகின்றனர். இவ்வாறு, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
   விழிப்புணர்வு தேவை: இந்திய மருத்துவ கழக பொதுச் செயலர் ஜதீன்தர் குமார் கூறும்போது, "ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க, அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை சுகாதார பழக்க வழக்கங்கள் குறித்து, பள்ளி குழந்தைகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக